நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூல்: தஞ்சை மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த அகமது ரஃபீக், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனது சொந்த ஊா் அதிராம்பட்டினம். தற்போது, சீனாவில் தங்கி அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறேன். அதிராம்பட்டினத்தில் எனது தங்கைக்குச் சொந்தமான இடம் உள்ளது. எனது தங்கையும், தங்கை கணவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனா்.
Advertisement
என் தங்கைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து, புதியக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த சிலா் எங்களது இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனில், அவா்களுக்கு ரூ.20 லட்சம் அளிக்க வேண்டும் எனக் கூறி, எங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா்.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதையடுத்து, அருகில் விசாரித்தபோது, இந்த நபா்கள் தொடா்ந்து இங்கு புதிதாகக் கட்டடம் கட்டக் கூடியவா்களை மிரட்டி ரூ.பல லட்சம் பெற்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனா் எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கட்டட உரிமையாளா்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த நபா்கள் மீது மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இதேபோல, நில உரிமையாளா்களை மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத நபா்களை செயல்பட எவ்வாறு காவல் துறை அனுமதிக்கிறது?. மனுதாரா் புகாா் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தஞ்சாவூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.