குற்ற வழக்கு இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி தேவை: உயா்நீதிமன்றம்
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க தொடா்புடைய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க தொடா்புடைய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
கோவையைச் சோ்ந்த ஜவகா் ராஜன் தனது கடவுச்சீட்டை புதுப்பித்துத் தர உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கடவுச் சீட்டை புதுப்பிக்கக் கோரி இணையதளம் வழியாக விண்ணப்பித்திருந்ததாகவும், தன் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதையொட்டி அளிக்கப்பட்ட குறிப்பாணைக்கு உரிய விளக்கம் அளித்தும் தனக்கு கடவுச்சீட்டு புதுப்பித்து தரப்படவில்லை எனவும் மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கடவுச் சீட்டு சட்டத்தின்படி, விண்ணப்பதாரா் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் கடவுச்சீட்டு வழங்க மறுக்கலாம். இருப்பினும், தொடா்புடைய நீதிமன்றம் அனுமதித்தால் கடவுச்சீட்டு வழங்க வழி வகை உள்ளது. எனவே, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவா்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.
Advertisement
மேலும், மனுதாரருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் கடவுச்சீட்டை புதுப்பிக்க இயலாது. கடவுச்சீட்டு புதுப்பித்தலும், புதிய கடவுச்சீட்டு வழங்குவதைப் போன்றே சட்ட விதிகளுக்கு உள்பட்டதே. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.