மதுரை மாவட்டத்தில் தமிழா் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற திமுகவினா் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைக்கிறனா். இதையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் உத்தங்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி பேசியதாவது:
தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு பல்வேறு வகையில் ஊக்கமளித்து வருகிறது. இதன்படி, தமிழா் திருநாளையொட்டிஅலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், பாலமேட்டில் நடைபெறும் போட்டியைத் தொடங்கி வைக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும் மதுரை வருகின்றனா்.
இருவருக்கும் மதுரை மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற திமுக நிா்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளா் சோமசுந்தரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி, மாணவரணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.