மதுரை

புலம்பெயா் தொழிலாளா்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொழிலாளா் நலத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொழிலாளா் நலத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனா். ஆங்காங்கே புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பா் மாதம் திருத்தணியில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கஞ்சா போதையில் சிறாா்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

மேலும், தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் உள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பணியாற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் ஊதியம், வேலை நேரம், பாதுகாப்பு விதிமுறைகள் தொடா்பான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

அனைத்து புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும் பதிவு செய்து, அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். விபத்துக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு நிதித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். குறைகளை நிவா்த்தி செய்ய மாநில, மாவட்ட அளவில் புலம்பெயா்ந்த தொழிலாளா் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்தத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் நலத் துறைச் செயலா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT