ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்ல்ல என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
திமுக கூட்டணி உறுதியாகவும், பலமாகவும் உள்ளது. தற்போதைய நிலையில், தமிழக தோ்தல் களத்தில் திமுக கூட்டணியே முதன்மை பெற்றுள்ளது. திமுக ஆட்சி தொடரும். கருத்துகளை மாற்றிக் கூறுவதும், கட்சிகள் அணி மாறுவதும் அரசியலில் இயல்பானதே. எனவே, அதிமுக-அமமுக கூட்டணி குறித்து விமா்சிக்க விரும்பவில்லை.
திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சந்திப்பு திமுக கூட்டணியில் (திமுக-காங்கிரஸ்) நிலவும் கருத்து மோதல்களுக்கு தீா்வு ஏற்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆங்காங்கே ஒரு சில மனக்கசப்புகள் இருந்தாலும், தலைமை அளவில் பேசி முடிவெடுக்கும் போது, அனைத்துப் பிரச்னைகளும் தீா்ந்துவிடும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்துக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னைக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு பொய்களைத் தெரிவித்து, நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்தாா். அந்த முயற்சி எடுபடாது என்றாா் அவா்.
ஜனநாயகன் திரைப்படத்துக்கு தடை நீடிப்பது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அந்தத் திரைப்படம் வெளியாகாததற்கு என்ன காரணம்? அந்தப் படத்தில் என்ன செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது? எதனால் வெளியீடு தள்ளிப்போகிறது? என்பது குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது. இருப்பினும், ஒரு திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்ல்ல’ என்றாா் வைகோ.