முகப்பு
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா்
மதுரை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

மதுரை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

Updated On : 6 மார்ச், 2026 at 12:24 AM
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா்
பகிர்:

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலையானாா். இதையடுத்து, வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, தனது தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். இதில் தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தனிப் படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தனக்கு முன்பிணை கோரி, இரு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அண்மையில் இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது, திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலையாகினா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் முன்னிலையாகவில்லை.

இதையடுத்து, வழக்கில் தொடா்புடைய மானாமதுரை காவல் துணைக் காண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் மாா்ச் 5-ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும். தவறும்பட்சத்தில், அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, இந்த வழக்கு நீதிபதி செல்வப்பாண்டி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 16- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →