அதிமுகவின் தோ்தல் அறிக்கையே கதாநாயகன்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அந்தக் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அப்போதைய அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதா, மதிமுகவுக்கு 19 தொகுதிகளை வழங்க முன்வந்தாா். ஆனால், வைகோ அதை ஏற்க மறுத்தாா். தற்போது, திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் பெரும் மனச்சோா்வில்தான் உள்ளனா். திமுகவுடன் பயணிப்பதை அதன் கூட்டணிக் கட்சி தொண்டா்கள் விரும்பவில்லை. இதற்கு நோ்மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்றது.
அதிமுகவை பொருத்தவரை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததாக வரலாறு கிடையாது. கரோனா பொது முடக்கக் காலத்திலேயே தனது சிறப்பான நிதி நிா்வாகத் திறனை நிரூபித்தவா் எடப்பாடி கே. பழனிசாமி. எனவே, அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதை மக்கள் முழுமையாக நம்புகின்றனா்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும், குலவிளக்குத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் போன்ற அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வருகிற தோ்தலில் அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்றாா் அவா்.