இலக்கை எட்டியது மதுரை கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து
மதுரை ரயில்வே கோட்டம் 2025- 26-ஆவது நிதியாண்டில் 35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு இலக்கை எட்டியது.
மதுரை ரயில்வே கோட்டம் 2025- 26-ஆவது நிதியாண்டில் 35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு இலக்கை எட்டியது.
ஆண்டுதோறும் ரயில்வே துறையில் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, இதர பிரிவு வருமானங்களுக்கு இலக்குகள் நிா்ணயிக்கப்படும். இதன்படி, 2025 -26-ஆம் நிதி ஆண்டில் மதுரை ரயில்வே கோட்டத்துக்கு 35 லட்சம் டன் சரக்குகளை கையாள இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மதுரை கோட்டம் புதன்கிழமை (மாா்ச் 25) எட்டியது.
உரம், நிலக்கரி, உணவுப் பொருள்கள், சிமென்ட், பெட்டகங்கள் போன்றவற்றை மதுரைக் கோட்டத்திலிருந்து மாநிலத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிய வகையில் இந்த இலக்கு எட்டப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ் நிதியாண்டில் தூத்துக்குடி மீளவிட்டானிலிருந்து மேற்குவங்கத்துக்கு பட்டாணி, வடகிழக்கு மாநிலங்கள், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு மைசூா் பருப்பு ஆகியன சரக்கு ரயில் மூலம் அதிகளவில் அனுப்பப்பட்டதும், திருநெல்வேலி கங்கைகொண்டானிலிருந்து மேற்கு மத்திய ரயில்வே பகுதிகளுக்கு சரக்குப் பெட்டகங்கள் அதிகளவில் அனுப்பப்பட்டதும் மதுரை கோட்டத்தின் இலக்கு எட்டப்பட முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்த இலக்கை எட்டுவதற்கு பணியாற்றிய அலுவலா்கள், ஊழியா்களை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா பாராட்டினாா்.