ராமநாதபுரம்

கமுதி பகுதியில் அரசு விடுதிகளில் கட்டாய விடுமுறை: மாணவர்கள் அவதி

DIN

கமுதி பகுதியில் அரசு மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் கட்டாய விடுமுறை அளிப்பதால் அவற்றில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கமுதி பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பிற்பட்டோர் நலத்துறை விடுதிகள், ஆதி திராவிட நலத்துறை விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தற்போது கிராமபுற ஏழை மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இதில் மண்டலமாணிக்கம், பம்மனேந்தல், கோவிலாங்குளம் விடுதிகளில் மட்டும் பள்ளி விடுமுறை, சனி, ஞாயிறு தினங்கள் மற்றும் ஒரு நாள் பள்ளி விடுமுறை என்றால் கூட விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்லுமாறு விடுதி காப்பாளர்கள் கட்டாயபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க முடியாமால் தங்களது கிராமத்திற்கு சென்று விட்டு சிறப்பு வகுப்புகளுக்கு வந்து படித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மண்டலமாணிக்கம் விடுதி மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளியில் சேர்க்க பணம் செலவு செய்ய முடியாமால் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் விடுதி காப்பாளர் ஒரு நாள் விடுமுறை என்றால் கூட முன் அறிவிப்பு இன்றி விடுதிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை கட்டாயபடுத்தி ஊர்களுக்கு செல்லுமாறு கூறி விடுதியை பூட்டி வைத்துள்ளனர். இதனால் ஏழை கிராமபுற மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
பம்மனேந்தல் கிராம பொது மக்கள் கூறியதாவது:பம்மனேந்தல் மாணவர்களின் விடுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி வேலை நாள்களில் மட்டுமே விடுதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கபடுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் விடுதியை விடுதி காப்பாளர் திறப்பதில்லை. விடுதி காப்பாளர்கள் போலியாக கணக்கு காண்பித்து அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்றனர்.
கோவிலாங்குளம் விடுதி மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: விடுதி மாணவர்களுக்கு அரசு நாள்தோறும் மூன்று வகையான உணவுகளுடன் முட்டை, இறச்சி, பால் உள்ளிட்டவையும் வழங்கபட்டு வரும் நிலையில், அந்த உணவுகளை விடுதி மாணவர்களுக்கு விநியோகிக்காமால் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக பதிவு செய்து வரும் விடுதி காப்பாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் முருகானந்தம் கூறியதாவது: விடுமுறை தினங்களில் விடுதிகளில் 2 மாணவர்கள் தங்கினால் கூட அவர்களுக்கு தேவையான உணவுகளை முறையாக வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவின்றி விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கும் விடுதி காப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுமுறை தினங்களில் விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT