சேதமடைந்த விடுதி கட்டடங்களை சீரமைக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர், மாணவியர் விடுதிகளில் சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர், மாணவியர் விடுதிகளில் சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு 64, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு 40 விடுதிகள் என மொத்தம் 104 விடுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் சுற்றுச் சுவர், கழிப்பறை குழாய், மேற்கூரை, தண்ணீர் குழாய், கதவுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
விடுதிகளில் சேதமடைந்தவற்றை சீரமைக்கக் கோரி, விடுதிக் காப்பாளர்கள் மாவட்ட பிற்பட்டோர், ஆதிதிராவிடர் அலுவலர்களிடம் புகார் தெரிவித்து ஓராண்டுக்கு மேலாகியும், சேதங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், மேற்கூரை சேதம் அடைந்துள்ள பல விடுதிகளில் மாணவர்கள் அச்சத்துடனேயே தங்கி வருகின்றனர்.
எனவே, இந்த விடுதிகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்வர வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.