மணல் திருட்டு: 5 பேர் கைது
கமுதி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கமுதி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கமுதியை அடுத்த மணடலமாணிக்கம் புத்துருத்தி அருகே குண்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. அதையடுத்து, மண்டலமாணிக்கம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மதுமதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அப்பகுதியில் மணல் ஏற்றிய நிலையில் இருந்த இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் ஓட்டுநர்களான முதுகுளத்தூர் செல்லியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கார்த்திக் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் சுபாஷ் (22) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் அபிராமத்தில் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்ட 3 வாகனங்களை அபிராமம் போலீஸார் பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநர்களான மருதங்கநல்லூர் கருப்பசாமி, சைவத்துரை, அபிராமம் பச்சேரி அன்புசினேகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.