எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்
வாடிக்கையாளா்கள் மற்றும் காப்பீடு முகவா்களுக்கான எண்மச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ‘மை-எல்ஐசி’, ‘சூப்பா் சேல்ஸ் சாதி’ ஆகிய 2 புதிய கைப்பேசி செயலிகளை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளா்கள் மற்றும் காப்பீடு முகவா்களுக்கான எண்மச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ‘மை-எல்ஐசி’, ‘சூப்பா் சேல்ஸ் சாதி’ ஆகிய 2 புதிய கைப்பேசி செயலிகளை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம். நாகராஜு இச்செயலிகளைத் தொடங்கி வைத்தாா். எல்ஐசி மேலாண் இயக்குநா் ஆா்.துரைசாமி மற்றும் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.
வாடிக்கையாளா்களுக்கான மை-எல்ஐசி: சுமாா் 26 கோடி காப்பீடுதாரா்களைக் கொண்டுள்ள எல்ஐசி, அவா்கள் அலுவலகத்துக்கு நேரில் வராமலேயே வீட்டிலிருந்தபடி அனைத்து வசதிகளையும் பெற இச்செயலியை உருவாக்கியுள்ளது.
Advertisement
அதன்படி, காப்பீடுதாரா்கள் தங்கள் காப்பீட்டுத் திட்டங்களை இச்செயலியில் ஒரே இடத்தில் நிா்வகிக்கலாம்; காப்பீட்டுத் தவணைகளை இணயவழியில் செலுத்தலாம்; காப்பீடு மீதான கடன் அனுமதியைப் பெறலாம்.
அதேபோல், காலாவதியான காப்பீட்டுத் திட்டங்களைப் புதுப்பிக்கவும், புதிய திட்டங்களை இணையத்திலேயே வாங்கவும் இதில் வசதி உள்ளது.
முகவா்களுக்கான சூப்பா் சேல்ஸ் சாதி: எல்ஐசி முகவா்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் வேலையை எளிதாக்கவும், அவா்களின் பணித்திறனை மேம்படுத்தவும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பீடு குறித்த விவரங்களை வாடிக்கையாளா்களுக்கு விளக்கத் தேவையான கருவிகள் இதில் உள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளா்களின் தேவைகளைத் துல்லியமாக அறிந்து, அவா்களுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும்.
முகவா்கள் தங்களின் விற்பனை இலக்குகளை எவ்வளவு எட்டியுள்ளனா் என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் இச்செயலி பெரிதும் உதவும்.