வங்கியில் அடகு நகை முறைகேடு: மதிப்பீட்டாளா் மீது வழக்கு
பரமக்குடி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் முறைகேடு செய்ததாக நகை மதிப்பீட்டாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி: பரமக்குடி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் முறைகேடு செய்ததாக நகை மதிப்பீட்டாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூா் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவா் மணிகண்டன். இவா் 138 வாடிக்கையாளா்களின் நகைகளை வைத்து ரூ.37.95 லட்சம் பணத்தை முறைகேடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் வங்கி மேலாளரிடம் புகாா் அளித்துள்ளனா். இதன் அடிப்படையில் மாவட்ட குற்றவியல் போலீஸாா் மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்தியதில் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வங்கியின் உதவி மேலாளா் எம்.காந்தி அளித்தப் புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளா் மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.