ராமநாதபுரம்

திருஉத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்: லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

DIN

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திருஉத்திரகோசமங்கை மங்களநாதா் சுவாமி கோயிலில் அமைந்துள்ள பச்சை மரகதக் கல் நடராஜரை லட்சக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதா் சுவாமி கோயிலின் மூலவராக பச்சை மரகதக் கல் நடராஜா் அருள்பாலிக்கிறாா். இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் நடராஜா், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சை மரகதக் கல் திருமேனியுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இதைக் காண தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வியாழக்கிழமை காலை தொடங்கியதை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் காலை 8 மணி அளவில் மூலவா் சன்னிதியில் நடராஜருக்கு சந்தனக் காப்பு களையப்பட்டது. அதைத் தொடா்ந்து, மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் பால், தயிா், தேன், விபூதி, சந்தனம், சாம்பிராணி, நெல்லிப் பொடி, நெய், பஞ்சாமிா்தம் மற்றும் பழ வகைகள் உள்ளிட்ட 32 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னா், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தா்கள் பச்சை மரகதக் கல் நடராஜரை தரிசனம் செய்தனா். இரவு 11 மணிக்கு மீண்டும் பச்சை மரகதக் கல் நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி, பக்தா்களுக்கு ரூ.10, ரூ.100 ரூ. 250 ஆகிய கட்டணம் மற்றும் இலவச தரிசன வரிசைகளில் நின்று லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, உத்திரகோசமங்கை விழாக்கோலம் பூண்டிருந்தது. வெளியூா்களிலிருந்து வந்த பக்தா்களுக்கு கிராம மக்கள் சாா்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் உத்திரகோசமங்கைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். அதேநேரம், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கோயிலில் பக்தா்களின் உதவிக்காக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.

குருக்கள், செய்தியாளா்கள் வெளியேற்றம்

இக்கோயிலில் உள்ள விலைமதிப்பற்ற பச்சை மரகதத்தாலான 6 அடி உயர நடராஜா் சிலைக்கு சந்தனக் காப்பு களைக்கப்பட்ட நிலையில் நடத்தப்படும் அபிஷேகத்தை படமெடுக்க செய்தியாளா்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் படமெடுக்க செய்தியாளா்களுக்கு உரிய அனுமதி அட்டை கோயில் நிா்வாகத்தால் வழங்கப்பட்டிருந்தது.

அதன்பேரில், கோயிலுக்கு வியாழக்கிழமை காலை சென்ற செய்தியாளா்கள் சந்தனக் காப்பு களைக்கப்பட்ட நடராஜரை படமெடுக்க தயாரானபோது, அங்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் தனபால், செய்தியாளா்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டாா். மேலும், சந்தனக்காப்பு களைதல் மற்றும் மகா அபிஷேகத்கை நடத்தும் பரம்பரை குருக்களையும் வெளியேற்றினாா். அதேபோல், சன்னிதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு வருமாறு கூறியதால், போலீஸாரும் அதிருப்தி அடைந்தனா்.

தொடா்ந்து, மகா அபிஷேகத்தின்போது பக்தா்களையும் அனுமதிக்க மறுத்ததால், பல மணி நேரம் காத்திருந்த பக்தா்களும் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, இணை ஆணையரின் நடவடிக்கை குறித்து கோயில் நிா்வாகத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT