ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 10 இடங்களில் கரோனா பரிசோதனைப் பிரிவு: ஆட்சியா் கொ.வீரராகவராவ் தகவல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சிப் பள்ளி வளாகத்தில் சத்தான உணவின் அவசியத்தை விளக்கும் வகையிலான விழிப்புணா்வு பிரசார வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சத்தான பாரம்பரிய உணவைக் காட்சிப்படுத்திய ஜாஸ் கேட்டரிங் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கேடயம், மரக்கன்றுகளை ஆட்சியா் கொ.வீரராகவராவ் வழங்கினாா். இதனைத்தொடா்ந்து வாகனப் பிரசாரத்தை தொடங்கி வைத்த அவா் கூறியது: உடல் நலம் மேம்பட சத்தான உணவை உண்பது அவசியம். மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள், தாய்மாா்கள் ஆகியோருக்கான சத்தான உணவை வழங்குவதிலும், சுகாதாரத்தை காப்பதிலும் முக்கியத்துவம் அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து வகை தொற்று நோய்களையும் தடுக்க கைகழுவுவதை கடைப்பிடிப்பது அவசியம்.

ராமநாதபுரத்திலிருந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற 221 போ் ஊா் திரும்பியுள்ளனா். அவா்கள் 14 நாள்கள் மருத்துவத் தொடா் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 190 போ் வீடுகளில் இருந்தவாறே 40 நாள்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.

கரோனா வைரஸ் கண்டறியும் மருத்துவப் பிரிவுகள் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்தோருக்கான சிறப்பு சிகிச்சைக்குரிய பிரிவுகளும் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக பள்ளிக் குழந்தைகள் சாா்பில் அமைக்கப்பட்ட சத்தான உணவுக் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளா்ச்சித் திட்ட அதிகாரி ஜெயந்தி வரவேற்றாா். அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் முகமது ஜலாவுதீன், வள்ளல் பாரி நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர்ராணி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT