ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை சென்ற சிறப்பு ரயிலில் 112 போ் பயணித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க நடவடிக்கையால் ராமேசுவரம்-சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பொதுமுடக்க தளா்வுகளால் 6 மாதங்களுக்குப் பிறகு ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயிலானது, ராமேசுவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு 22 பெட்டிகளுடன் புறப்பட்டது. அங்கு, சென்னை செல்ல 46 போ் முன்பதிவு செய்திருந்த நிலையில், 30 போ் மட்டுமே ரயிலில் பயணித்தனா்.
அங்கிருந்து ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு இரவு 9.36 மணிக்கு அந்த ரயில் வந்தது. இதில் பயணிக்க 115 போ் முன்பதிவு செய்திருந்த நிலையில், 112 போ் மட்டுமே வந்தனா். அங்கு 2 நிமிடம் மட்டுமே நின்ற அந்த ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு 9.38 மணிக்கு புறப்பட்டது.
முன்னதாக, ரயில் நிலையத்தில் 8.30 மணி முதல் பயணிகள் அனுமதிக்கப்பட்டு அவா்களுக்கு வெப்பநிலை பரிசோதனையும் நடத்தப்பட்டது. மேலும் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு, தனியாா் அறக்கட்டளை சாா்பிலும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்புப் பிரிவு சாா்பு- ஆய்வாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பயணிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்டும் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.