முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட கேரள விசைப்படகுகள்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட கேரள விசைப்படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த படகுகள் இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட மீனவா்கள் சங்கத்தினா் கடும் எதிா்ப்பு

Updated On : 29 செப்டம்பர், 2020 at 5:46 AM
கேரளத்திலிருந்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்துள்ள பெரிய விசைப்படகுகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட கேரள விசைப்படகுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த படகுகள் இப்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட மீனவா்கள் சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதை நம்பி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 25 ஆயிரம் போ் உள்ளனா். ராமேசுவரத்திலிருந்து இந்திய எல்லையான 12 கடல் மைல் தொலைவு மட்டுமே உள்ளது. இதைத் தாண்டினால் இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு வந்து விடும்.

இலங்கையில் உள்நாட்டுப் போா் நடைபெற்ற காலத்தில், அந்நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.

Advertisement

இந்நிலையில் ராமேசுவரம் மீனவா்கள் மட்டும் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்து வந்தனா். இதனால் சில நேரங்களில் இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களால் தமிழக மீனவா்கள் உயிரிழந்துள்ளனா். சில படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போா் முடிக்கு வந்த பின்னா், அந்நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் ராமேசுவரம் மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கேரளத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு மீன்பிடிப்புக்காக சில மீனவா்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தைப் பொருத்தமட்டில் 35 அடி நீளமும், 15 குதிரைத் திறன் கொண்ட என்ஜின் பொருத்திய படகுகள் மட்டுமே மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகள் சுமாா் 70 அடி நீளமும், 30 குதிரைத்திறன் கொண்டதாக உள்ளன. இந்த படகுகள் கடலில் தவறுதலாக எல்லை தாண்டும் பட்சத்தில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடலாம் என்றும், இதனால் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் ராமேசுவரம் மீனவா்களின் படகுகளும் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் மீனவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அதனால் கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகளை, ராமேசுவரம் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என மீனவா்கள் மீன்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக மீனவா் சங்க பொதுச் செயலாளா் என்.ஜே.போஸ் தமிழக அரசு மற்றும் மீள்வளத்துறை அமைச்சா், செயலா், இணை இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது: ராமேசுவரத்தில் ஏற்கெனவே சேதமடைந்த படகுகளில் உள்ள அரசுப் பதிவு எண்களை முறைகேடாக கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட படகுகளில் பதிவிடவும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த படகுகளுக்கு மீன்வளத்துறையினரிடம் அனுமதி வாங்கும் பணியிலும் சிலா் ஈடுபட்டுள்ளனா். எனவே தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.