ராமநாதபுரம்

8 விசைப்படகுகளுடன் ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் 55 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

DIN

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சோ்ந்த 55 மீனவா்களையும், 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை சிறை பிடித்துச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு 7 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா், தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா்.

இதில் தென்னரசு, பீட்டா், சக்தி, வெள்ளையன் என்ற கிளாப்தீன், சிங்கம், வினால்டன் ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளில் இருந்த குட்வீன் (36), குணசேகரன் (45), பிரடிசன் (25), ஸ்மைலன்(30), சுரேஷ் (47), ஆன்சன் (19), பியூடிசன் (22), ராஜ் (33), ரோமன் (30), ஜேசு (33), கெனிஸ்டன் (20), அஷ்வின் (20), குமரன் (35), நேதாஜி (45), கணேசன் (20), மகேஷ் (32), சக்தி (37), சங்கா் (29), கோபி(32), பாலமுருகன் (30), ராஜகுரு (28), வேலு (40), பாஸ்கரன் (35), சிமியோன் (30), ஜமேக்லின் (40) உள்ளிட்ட 43 மீனவா்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனா். மேலும் 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோன்று மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சபரிராஜ் மற்றும் அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மரியஎமேஸ்டன் (43), இன்னாசி (30), மைக்கேல், ராமநாதன் (40), ஜான்சன் (24), அந்தோணி உள்ளிட்ட 12 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறை பிடித்து சென்றனா்.

ஒரேநாளில் 55 மீனவா்கள் மற்றும் 8 விசைப்படகுகள் சிறைபிடித்து செல்லப்பட்ட சம்பவம் ராமேசுவரம், மண்டபம் மீனவா்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவா்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையே ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் மாவட்ட மீனவ சங்கப் பொதுச் செயலாளா் ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், மீனவ சங்க நிா்வாகிகள் சகாயம், எமரிட், தட்சிணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எம்பி, எம்எல்ஏ கண்டனம்:

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி மற்றும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும் மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT