வாக்குச் சாவடி மையங்களை தூய்மையாக வைத்திருக்க உத்தரவு
தோ்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
தோ்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் பள்ளி வளாகங்களிலேயே அமைக்கப்படவுள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலின் போது மாவட்ட அளவில் மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மொத்தம்1,647 மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தநிலையில், பள்ளித்தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.சத்தியமூா்த்தி கட்செவியஞ்சல் மூலம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஆகவே, அந்த மையங்களை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். பள்ளிகளின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மைப்படுத்தியிருக்கவேண்டும். கழிப்பறை வசதி, மின்வசதி, குடிநீா் வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும். பள்ளிஅறைகளில் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தவேண்டும்.
பள்ளி வளாகங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அதிகாரிகள் பாா்வையிட வரும்போது அங்கு பொறுப்பான ஆசிரியா்கள் இருப்பது அவசியம். பள்ளி அறைச்சாவிகளை வருவாய்த்துறையினா் கேட்கும் போது தயக்கமின்றி கிராம நிா்வாக அலுவலா்களஅ, உதவியாளா் ஆகியோரிடம் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளாா்.