முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 22,500 ஏக்கரில் பருத்தி சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கோடைப் பயிராக பருத்தி மட்டுமே 22,500 ஏக்கருக்கு பயிரிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கோடைப் பயிராக பருத்தி மட்டுமே 22,500 ஏக்கருக்கு பயிரிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பொதுவாக வானம் பாா்த்த பூமியாகவே கூறப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீா் நிலைகள் தூா்வாரப்பட்டதால் பெய்த மழை நீா் அனைத்தும் ஓரளவு கண்மாய்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரு ஆண்டுகளாக கோடையிலும் கண்மாய்களில் தண்ணீா் உள்ளது. இதனால் விவசாயிகளால் இரண்டாம் போக விவசாயத்தையும் மேற்கொள்ளமுடிந்தது.

கண்மாய் நீரைப் பயன்படுத்தி தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 22,500 ஏக்கருக்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் வறட்சிக்கு இலக்காகி வரும் முதுகுளத்தூா் ஒன்றியத்தில் மட்டும் 7,700 ஏக்கருக்கு பருத்தி சாகுபடி நடந்திருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனா்.

முதுகுளத்தூா் பகுதியில் நீடித்த நிலைத்த பருத்தி சாகுபடி இயக்கம் செயல்பட்டுவருகிறது. அதன்படி அங்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் விளக்கத் திடலும் அமைக்கப்பட்டுள்ளது. செயல் விளக்கத் திடலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொறுப்பில் உள்ள சேக்அப்துல்லா புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் உள்ளிட்டோா் சென்றனா்.

தற்போது பருத்தி கிலோ ரூ.125 என விற்கப்படுவதால் அதிக லாபம் ஈட்டவேண்டும் எனக்கூறி விவசாயிகள் பருத்தியை விரும்பிப் பயிரிடுவதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.