முகப்பு
ராமநாதபுரம்

கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடிக்கச் செல்ல தடை: ராமேசுவரம் பகுதியில் ரூ. 10 கோடிக்குஇறால்மீன் ஏற்றுமதி பாதிப்பு

ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதையடுத்து மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 10 கோடிக்கு இறால்மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்

Updated On : 5 ஆகஸ்ட், 2022 at 12:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:29 PM

ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதையடுத்து மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 10 கோடிக்கு இறால்மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீா்ணை பகுதியில் வழக்கத்தைவிட சுமாா் 50 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, மீனவா்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். அதே போல் தற்போது 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி மற்றும் தொண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 4 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 8 ஆயிரம் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 4 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் ரூ. 10 கோடி அளவுக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்க நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். இதுபோன்று இயற்கை இடா்பாடுகள் ஏற்பட்டு தொடா்ந்து மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அரசு சாா்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.