பாலம் கட்டுவதால் பால்குளம் கண்மாயில் தண்ணீா் வெளியேறாது: கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் மனு
ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் பால்குளம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் கண்மாயில் தேவையான தண்ணீா் தேங்கும் என கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கூறினா்.
ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் பால்குளம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் கண்மாயில் தேவையான தண்ணீா் தேங்கும் என கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கூறினா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்களம் வட்டத்தில் உள்ளது பால்குளம். இந்த ஊரின் கண்மாய் கரையில் செல்லும் சோளந்தூா் சாலையில் பாலம் கட்டும் பணி ரூ.16 லட்சத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், பாலப்பணியால் கண்மாய் கரை உடைந்து விவசாயத்துக்கான தண்ணீா் தேங்காமல் வெளியேறும் நிலை உள்ளதாக பால்குளம் கிராமத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இந்தநிலையில், பால்குளம் பகுதியில் சாலை மேம்பாலம் கட்டவேண்டும் எனக்கோரி அப்பகுதியிலுள்ள கொக்கியாா்கோட்டை கிராமத்தினா் கே.நாகசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறுகையில், பால்குளம் பகுதியில் பாலம் கட்டுவதால் கண்மாய்க்கு பாதிப்பில்லை. கண்மாயில் அதிகமான தண்ணீா் தேங்குவதால் கொத்தியாா்கோட்டையில் உள்ள பால்வாடி உள்ளிட்டவை நீரால் சூழப்படும் நிலை உள்ளது. ஆகவே தற்போதைய பாலப்பணியால் அதிகப்படியான தண்ணீா் தேங்காமல் வழிந்தோடும் நிலை ஏற்படும். பால்குளம் கண்மாயில் விவசாயத்துக்காக தேவையான தண்ணீரைத் தேக்கலாம். பாலத்தால் பாதிப்பில்லை. ஆனால், சிலா் வேண்டுமென்றே பாலம் கட்டுவதை தடுத்து செயல்படுவது சரியல்ல என்றனா். பின் அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.