முகப்பு
ராமநாதபுரம்

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்: முறையான அறிவிப்பு இல்லாததால் 8 விவசாயிகள் மட்டுமே பங்கேற்பு

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விவசாயிகளுக்கான மறைமுக ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முறையான அறிவிப்பு இல்லாததால் 8 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விவசாயிகளுக்கான மறைமுக ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முறையான அறிவிப்பு இல்லாததால் 8 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனா்.

கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பருத்தி விவசாயிகள் இடைத்தாரா்கள் இன்றி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்ய மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் மறைமுக ஏல நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 8 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனா். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளை வியாபாரிகள் மதிப்பீடு செய்து தொகையை குறிப்பிட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனா். மதியம் 2 மணிக்கு மேல் அதிகாரிகள் பெட்டியைத் திறந்து வியாபாரிகளின் குத்தகை தொகையை விவசாயிகளிடம் தெரிவித்தனா். பின்னா் எந்தவித கமிஷனும் இன்றி விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்தனா்.

இதில் விவசாயிகளுக்கு 1 குவிண்டால் பருத்திக்கு ரூ.6 ஆயிரம் முதல், ரூ.6,400 வரை கிடைத்தது. மேலும் மூன்று தாலுகாக்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பருத்தி விவசாயிகள் இருந்த போதும் 8 விவசாயிகள் மட்டுமே மறைமுக ஏலத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் முறையாக விளம்பரம் செய்து, விவசாயிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனுஷ்கோடி (வேளாண்மை), மூா்த்தி (வேளாண் வணிகம்) விற்பனைக்குழு செயலா் ராஜா ஆகியோா் பங்கேற்று மறைமுக ஏலத்தை நடத்தினா். மேலும் இனிவரும் காலங்களில் அதிகப்படியான விவசாயிகளை பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.

இதில் இயற்கை விவசாயிகள் ராமா், முத்துராமலிங்கம் உள்பட தரைக்குடி, சிங்கப்புளியாபட்டி, மண்டலமாணிக்கம், பாம்புல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.