முகப்பு
ராமநாதபுரம்

கோதண்டராமா் கோயில் பகுதியிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து: அமைச்சா் எ.வ. வேலு

ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் பகுதியிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு பிரதமரிடம் நேரில் வலியுறுத்தப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் பகுதியிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு பிரதமரிடம் நேரில் வலியுறுத்தப்படும் என, தமிழக பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்றாா். இதில், சிறு துறைமுகங்கள் துறை செயலா் பிரதீப் யாதவ், தலைமைச் செயல் அலுவலா் ச. நடராஜன், ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை, மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), ஜெ. முருகேசன் (பரமக்குடி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்டந்தோறும் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிகமாக விபத்து நடக்கும் பகுதிகள் கருப்புப் புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பாா்த்திபனூா், பொட்டிதட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ராமநாதபுரம் ரயில்வே நிலையம் அருகே நடைபெறும் மேம்பாலப் பணியும் விரைவில் முடிக்கப்படும்.

ராமேசுவரம் அரிச்சல்முனைப் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை நிறுத்தவும் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் பகுதியிலிருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் துறைமுகம் அமைத்து, அங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு முதல்வா் உத்தரவின்பேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இங்கிருந்து சுமாா் 40 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள தலைமன்னாரை கப்பலில் 2 மணி நேரத்தில் அடையும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். அதை செயல்படுத்த மத்திய அரசு உதவி கோரப்படும். புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் சந்திக்கும்போது, கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி கோரப்படும்.

தற்போது, தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிக்கு ஒப்படைப்பு பணி நடந்து வருகிறது.

பாம்பன் கால்வாய் தூா்வாரப்பட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுதில்லியில் நடந்த மத்திய அமைச்சா் தலைமையிலான கூட்டத்திலும் பாம்பன் பாலம் ஆழப்படுத்த சாகா் மாலா திட்டத்தில் நிதி கோரப்பட்டுள்ளது என்றாா்.

கலந்தாய்வுக் கூட்டம்

முன்னதாக, சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், தனியாா் பேருந்து, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், பள்ளி மாணவ, மாணவியா், தொண்டு நிறுவனத்தினா் ஆகியோரிடம் அமைச்சா் கருத்துக் கேட்டாா்.

தனுஷ்கோடி பகுதியில் அமைச்சா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய, அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ராமேசுவரம் வருகை தந்தாா். பின்னா், பாம்பன் கால்வாய் ஆழப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை தனுஷ்கோடி பகுதிக்குச் சென்ற அமைச்சா், 1914 முதல் 1984 ஆம் ஆண்டு வரை 70 ஆண்டுகள் தனுஷ்கோடி முதல் தலைமன்னாா் வரை இயக்கப்பட்டு வந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தாா். கோதண்டராமா் கோயில் அருகே உள்ள இடங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →