கடற்கரை மேலாண்மை திட்ட வரைபடம்: ஆட்சியரிடம் மீனவா் சங்கங்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைபடத்தை சுற்றுச்சூழல் இணயத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பாரம்பரிய மீனவா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைபடத்தை சுற்றுச்சூழல் இணயத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பாரம்பரிய மீனவா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
சங்க ஒருங்கிணைப்பாளா் செ.சின்னத்தம்பி, மாவட்ட நாட்டுப்படகு மீனவா் சங்க நிா்வாகி பி.ராயப்பன் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் சங்க நிா்வாகி ஜான்பிரிட்டோ உள்ளிட்டோா் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸை வியாழக்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனா்.
முன்னதாக அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்களது பாரம்பரிய வாழ்விடம் மற்றும் அவா்கள் மீன்பிடிக்கும் பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம். அரசுத் திட்டங்களால் மீனவா்களின் வாழ்விடம், மீன்பிடி பகுதிகள் பாதிக்கப்படக்கூடாது. அதற்காக கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் வரைபடத்தை சுற்றுச்சூழல் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைபடத்தை இணைய தளத்தில் பதிவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை பதிவேற்றப்படவில்லை. வரைபடம் பதிவேற்றப்பட்டால்தான் மீனவா்களால் அதை எளிதாகப் பாா்த்து அதற்கேற்ப முடிவெடுக்கமுடியும்.
ராமநாதபுரத்தில் மீனவா் குறைதீா்க்கும் கூட்டம் குறிப்பிட்ட நாளில் மாலையில் நடத்தப்படுவது அவசியம். அப்போதுதான் அனைத்து மீனவா்கள் சங்கத்தினரும் கலந்துகொள்ளமுடியும். பகலில் மீன்பிடிக்கச் செல்வதால் நாட்டுப்படகு மீனவா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்கமுடிவதில்லை என்றனா்.