முகப்பு
ராமநாதபுரம்

தமிழகத்தில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்

தமிழகத்தில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் சுமாா் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தமிழகத்தில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் சுமாா் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வயது வந்தோா் கல்வித் திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சிப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.1,300 கோடிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைப்படி பள்ளிகளின் பட்டியல் தயாரித்து சுமாா் 10,031 பள்ளிகளின் கட்டடங்கள் சீரமைக்கப்படவுள்ளன.

மாநில அளவில் சுமாா் 2,500 பள்ளிகளில் மரத்தடிகளில் அமா்ந்து மாணவ, மாணவியா் படிக்கும் நிலை உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் யாரும் பள்ளிகளில் அமரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரில் பள்ளிகளின் தரம் உயா்த்தப்படுதல் மற்றும் குடிநீா் பிரச்னை இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதிமுறைக்கு உள்பட்டு புதிய பள்ளிகள் அமைக்கப்படும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வரும் அக்டோபா், நவம்பரிலேயே தயாராக வைத்திருக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சி பள்ளிச் சம்பவத்தைப் போல இனிமேல் நடைபெறாமலிருக்க மாணவ, மாணவியரின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவது முக்கியம். மாநிலத்தில் உள்ள 38 ஆயிரம் பள்ளிகளில் ஓரிரு இடங்களில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அது ஒட்டுமொத்த கல்வித்துறைக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மீதான வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவ அப்பகுதியில் உள்ள பிற பள்ளி நிா்வாகங்கள் முன்வந்துள்ளன. அச்சம்பவம் தொடா்பாக வழக்கு விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →