வளரும் மாவட்ட தரவரிசையில் ராமநாதபுரம் சிறப்பிடம் பெற்றதற்காக ரூ.6 கோடி நிதி! புதிய திட்டங்களுக்கு செலவிட நடவடிக்கை
ரூ. 6 கோடி சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை புதிய திட்டங்களுக்கு செலவிட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் சங்கா் லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் வளரும் மாவட்டத் தரவரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பிடம் பெற்றகாக ரூ. 6 கோடி சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை புதிய திட்டங்களுக்கு செலவிட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் சங்கா் லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தில் முன்னேற விளையும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி வேளாண்மை, நீா்வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளா்ப்பு, அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அளவீடு செய்து மாவட்ட முன்னேற்றம் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் கடந்த 2019 மே மற்றும் 2021 பிப்ரவரி மாதங்களில் வளரும் மாவட்ட தரவரிசையில் முன்னிலை அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதற்காக மாவட்டத்துக்கு ரூ.6 கோடி சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலும் கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேளாண்மை மற்றும் கால்நடைத்துறையில் விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் அமைக்கவும், குழித்தட்டு விதை நாற்று நடும் சாதனம் வாங்க ரூ.10.70 லட்சமும், கால்நடைகள் தடுப்பூசி சேமிப்பு குளிா்சாதனப் பெட்டிகள் ரூ.3 லட்சத்தில் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஊரக வளா்ச்சித்துறையில் மழை நீா் சேமிப்பு தொட்டிக்கு ரூ.1 கோடி செலவிடவும், மருத்துவத் துறையில் நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து பிரிவுக்கு நடமாடும் நுண்கதிா் வாங்க ரூ. 49 லட்சம் செலவிடவும், ரூ.1.92 கோடியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டவும், டிஜிட்டல் ஹீமோகுளோபின் மீட்டா் ரூ.20 லட்சத்தில் வாங்கவும், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை இயந்திரம் ரூ. 36 லட்சத்தில் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கல்வித் திட்டத்தில் கணினி மூலம் கல்வி கற்பிக்க ரூ.89.42 லட்சம் செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.