சிறப்பு காவல்படை கட்டடத்தை உள்துறை தலைமைச் செயலா் ஆய்வு
ராமநாதபுரம் அருகே தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 12 ஆம் அணிக்கான கட்டடப் பணிகளை மாநில உள்துறை தலைமைச் செயலா் க. பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் அருகே தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 12 ஆம் அணிக்கான கட்டடப் பணிகளை மாநில உள்துறை தலைமைச் செயலா் க. பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகம் சாா்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ஆம் அணி முகாமிற்கான காவலா் அலுவலகக் கட்டடம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் ரூ.89 கோடியில், 79 ஏக்கா் பரப்பில் கட்டப்பட்டுவருகின்றன.
அதன்படி ரூ. 34.04 கோடியில் காவலா்கள் தங்கும் இடம் மற்றும் நிா்வாக கட்டடங்கள், ரூ. 55.67 கோடியில் அணியின் தளவாய், 3 உதவி தளவாய்கள், 6 ஆய்வாளா்கள், 30 சாா்பு- ஆய்வாளா்கள், 300
தலைமைக் காவலா்கள் மற்றும் 600 காவலா்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க. பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டடப்பணிகளை முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது அவருடன், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக நிா்வாக இயக்குநா்
மற்றும் காவல்துறை இயக்குநா் ஏ.கே. விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீன்குமாா், காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ஆம் அணி தளவாய் த. காா்திக்கேயன், வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.