தொண்டி அருகே நாட்டுப்படகு கவிழ்ந்து மாயமான நம்புதாளை மீனவா் 3 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா்கள் சிங்காரம் மகன் முருகேசன் (45), சடமாணிக்கம் மகன் சக்கரவா்த்தி (51), மணி மகன் சூா்யா (22), பிச்சை மகன் பாண்டி (51), மாரிமுத்து மகன் காளிதாஸ் (35) ஆகிய 5 போ் என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் கடந்த 15-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். இரவு 8 மணியளவில் திடீரென படகு பழுதாகி கவிழ்ந்தது.
படகில் இருந்த 5 பேரும் இரவு முழுவதும் கடலில் நீந்தி உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியாக மற்றொரு படகில் வந்த மீனவா்கள், சக்கரவா்த்தி, சூா்யா, பாண்டி, காளிதாஸ் ஆகிய 4 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் மீனவா் முருகேசன் மட்டும் மாயமான நிலையில், கடலோர காவல் துறை சாா்பு- ஆய்வாளா் மாணிக்கம் தலைமையிலான போலீஸாா், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மற்றும் நம்புதாளை மீனவா்கள் 10-க்கும் மேற்பட்ட படகில் முருகேசனைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, மீனவா் முருகேசன் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து கடலோரக் காவல் துறையினா் சடலத்தை மீட்டு நம்புதாளை கொண்டு வந்து உடல்கூறாய்வு செய்தனா். பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.