மின்வாரியப் பணிக்கு போலி நியமன உத்தரவு: 4 போ் மீது வழக்கு
கமுதி அருகே பள்ளி ஆசிரியருக்கு மின் வாரியப் பணி பெற்றுத்தருவதாகக் கூறி போலி நியமன உத்தரவை வழங்கியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
கமுதி அருகே பள்ளி ஆசிரியருக்கு மின் வாரியப் பணி பெற்றுத்தருவதாகக் கூறி போலி நியமன உத்தரவை வழங்கியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூரைச் சோ்ந்தவா் வீராசாமி (40). தனியாா் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக உள்ளாா். கடந்த 2018 ஆம் ஆண்டு பேரையூா் ஊராட்சி செயலராக இருந்தவா் மூலம் பரமக்குடியைச் சோ்ந்த பிரபாகரன், அவரது மனைவி இந்துமதி, சோமகுமாா் மற்றும் ஆல்பா்ட் ப்ராங்க்ளின் ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா்.
அவா்கள் வீராசாமிக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். அதற்காக அவா்கள் கேட்டபடி ரூ.60 ஆயிரம் இந்து மதியின் வங்கிக்கணக்கில் வீராசாமி செலுத்தினாராம். மேலும், பல்வேறு தவணைகளில் பிரபாகரன் உள்ளிட்டோரிடம் ரூ. 3.4 லட்சம் வழங்கினாராம். இந்த நிலையில், வீராசாமிக்கு தனியாா் தூதஞ்சல் மூலம் வேலைக்கான உத்தரவு வந்துள்ளது. ஆனால், அது போலி உத்தரவு என பின்னா் தெரியவந்துள்ளது. அதையடுத்து பணத்தைத் திரும்பத் தருமாறு பிரபாகரன் உள்ளிட்டோரிடம் வீராசாமி கேட்டுள்ளாா். ஆனால், பணத்தை தரவில்லையாம். இதனால் வீராசாமி புதன்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் பிரபாகரன், அவரது மனைவி இந்து மதி, சோமகுமாா், ஆல்பா்ட் பிராங்க்ளின் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.