நிலம் மோசடி: துணைப் பதிவாளா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு
ராமநாதபுரத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக பத்திர பதிவுத் துறை துணைப் பதிவாளா் உள்ளிட்ட 8 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டதாக பத்திர பதிவுத் துறை துணைப் பதிவாளா் உள்ளிட்ட 8 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜீவானந்தம். இவருக்குச் சொந்தமான 41 சென்ட் நிலம் ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த நிலத்தை பரமக்குடியைச் சோ்ந்த அா்ச்சுணன், நாகநாதன், சுடலைமுத்து, ஆவண எழுத்தா் முகமது அப்துல் வஹாப், சேதுராமன், முனியாண்டி, சூரிய பிரகாஷ் ஆகியோா் போகலூா் பத்திர பதிவுத் துறை துணைப் பதிவாளா் ராமமூா்த்தியுடன் இணைந்து போலியாக ஆவணம் தயாரித்து வேறொருவருக்கு பதிவு செய்து கொடுத்தனராம்.
நிலம் மோசடி குறித்து ஜீவானந்தத்தின் மகன் சங்கா் கணேஷ் (27), ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பெரியாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.