பாம்பன் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை கோரி பாம்பன் மீனவா்கள் போராட்டம்
இலங்கைக் கடற்படையினரால் பாம்பன், நம்புதாளை மீனவா்கள் 25 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீனவா்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் வடக்கு துறைமுகம், தொண்டியை அடுத்த நம்புதாளை பகுதிகளிலிருந்து 300 நாட்டுப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா். திங்கள்கிழமை அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் 4 படகுகளுடன் 25 மீனவா்களைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், பாம்பனில் அனைத்து நாட்டுப் படகு மீனவ சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராயப்பன் தலைமையில் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
வருகிற 5-ஆம் தேதி பாம்பன் பேருந்து பாலத்தை முற்றுகையிட்டுப் பேரணியாக மண்டபம் ரயில் நிலையத்துக்குச் சென்று, சென்னை செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பாம்பன் வடக்கு துறைமுகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.