முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேருக்கு நவ. 20 வரை காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 நவம்பர், 2024 at 3:08 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 7:01 PM

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேருக்கு வருகிற 20-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23- ஆம் தேதி விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

மறுநாள் 24-ஆம் தேதி அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மகேந்திரன், ராமா் பாண்டி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளில் இருந்த 16 மீனவா்களைக் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

Updated On : 7 நவம்பர், 2024 at 3:08 AM

இதையடுத்து, யாழ்ப்பாணம் நீரியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவா்கள் 16 போ் மீது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 16 பேரையும் நவ. 6-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 16 பேருக்கும் நவ. 20-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.