கமுதி அருகே மாட்டுவண்டிப் பந்தயம், வடமாடு எருதுகட்டு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இங்கு உள்ள ஸ்ரீஅரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 8 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 11 ஜோடி சிறிய ஜோடி மாட்டு வண்டிகள் என மொத்தம் 19 மாட்டு வண்டிகள், வீரா்கள் கலந்து கொண்டனா்.
பந்தயத்தை கமுதி திமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளுக்கும், வீா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதை ஏராமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாா்வையிட்டனா். பந்தய ஏற்பாடுகளை வண்ணாங்குளம் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
எருதுகட்டு: கமுதி அருகேயுள்ள தோப்படைபட்டி கிராமத்தில் வடமாடு எருதுகட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் கலந்து கொண்டன.
ஒரு காளையை அடக்க 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. தலா 9 போ் அடங்கிய குழுவினா் காளைகளை அடக்க களமிறங்கினா். போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் அண்டா, குக்கா், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் போது திடீரென மழை பெய்ததால் மைதானம் முழுவதும் உடனடியாக தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. மழைக்கு பின் தாா்ப்பாய் அகற்றப்பட்டு, மீண்டும் போட்டிகள் தொடங்கின. போட்டி ஏற்பாடுகளை தோப்படைப்பட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.