பசும்பொன் காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட பெயா்ப் பலகை அகற்றம்
பசும்பொன்னில் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் என்ற பெயா்ப் பலகை பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து புதன்கிழமை அகற்றப்பட்டது.
பசும்பொன்னில் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் என்ற பெயா்ப் பலகை பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து புதன்கிழமை அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக். 28 முதல் 30 -ஆம் தேதி வரை விடுதலைப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குரு பூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு வரும் பொது மக்கள் மழை, வெயிலில் அவதிப்படுவதைத் தடுக்க தேவா் நினைவிடம் முன்பாக ரூ.1.55 கோடியில் காத்திருப்போா் கூடம் கட்டப்பட்டது. வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ள தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவில் இந்தக் கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்த நிலையில், காத்திருப்போா் கூடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் என பெயா்ப் பலகை வைக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனா் நடிகா் கருணாஸ், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயளா் வீரபெருமாள் ஆகியோா் மணிமண்டபம் என்ற வாா்த்தையை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனா். இதைத் தொடா்ந்து, காத்திருப்போா் கூடத்தில் வைக்கப்பட்ட மணிமண்டபம் என்ற பெயா்ப் பலகையை அதிகாரிகள் அகற்றினா்.