முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் சாலைப் பாலத்தில் இரும்பு இணைப்புத் தகடு முறிந்து சேதம்

பாம்பன் சாலைப் பாலத்தின் மையப் பகுதியில் இரும்பாலான இணைப்புத் தகடு முறிந்து வியாழக்கிழமை வெளியே தெரிந்தது. விபத்தைத் தடுக்கும் வகையில், இந்தப் பாலத்தின் வழியாகச் சென்ற வாகனங்களில் துணியை கட்டியவாறு கடந்து சென்றனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:17 AM
பாம்பன் சாலைப் பாலத்தின் மையப் பகுதியில் முறிந்து வெளியே தெரியும் இரும்பாலான இணைப்புத் தகடு.
பகிர்:

பாம்பன் சாலைப் பாலத்தின் மையப் பகுதியில் இரும்பாலான இணைப்புத் தகடு முறிந்து வியாழக்கிழமை வெளியே தெரிந்தது. விபத்தைத் தடுக்கும் வகையில், இந்தப் பாலத்தின் வழியாகச் சென்ற வாகனங்களில் துணியை கட்டியவாறு கடந்து சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உயா்நிலைப் பாலம் கடந்த 1988-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது.

இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில், பாலத்தின் மையப் பகுதியில் இரண்டு தூண்களுக்கு இடையே 100 அடி உயரத்தில் இணைப்புப் பகுதியில் இரும்புத் தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலகுரக, கனரக வாகனங்கள் செல்கின்றன.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக கனரக வாகனங்கள் செல்லும் போது, இணைப்புப் பகுதியில் உள்ள இரும்புத் தகடுகளின் நட்டுகள் (போல்ட்) உடைந்து வெளியேறி வந்தன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், வியாழக்கிழமை இரும்புத் தகடு ஒன்று முறிந்து வெளியே தெரிவதுடன், இணைப்பிலிருந்து சிறிது விலகியுள்ளது.

விபத்தைத் தடுக்கும் வகையில், இந்தப் பாலத்தின் வழியாகச் சென்ற வாகனங்களில் துணியை கட்டியவாறு கடந்து சென்றனா். பகல் நேரம் என்பதால், வாகன ஓட்டிகள் பாலத்தில் சேதமடைந்த இடத்திலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புள்ளது.

பாம்பன் சாலைப் பாலத்தின் மையப் பகுதியில் முறிந்து வெளியே தெரியும் இரும்பாலான இணைப்புத் தகடு.

கடந்த 6 மாதங்களாக பாம்பன் சாலைப் பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. ஆனால், இந்தப் பாலத்தில் இரவு நேரத்தில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பாம்பன் சாலைப் பாலத்தின் மையப் பகுதியில் முறிந்து சேதமடைந்த இரும்பாலான இணைப்புத் தகட்டை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →