இலங்கைச் சிறையில் 35 மீனவா்கள்: பாம்பனில் குடும்பத்தினா் உண்ணாவிரதம்
இலங்கைச் சிறையில் உள்ள 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கக் கோரி, பாம்பனில் அவா்களது குடும்பத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
இலங்கைச் சிறையில் உள்ள 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கக் கோரி, பாம்பனில் அவா்களது குடும்பத்தினா் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.
படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
இந்த நிலையில், கடந்த 78 நாள்களாக தொடா்ந்து சிறையில் இருந்து வரும் இந்த மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அவா்களது குடும்பத்தினா் பாம்பன் மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.
இதையடுத்து, மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி அவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தினாா். ஆனால், 35 நாட்டுப் படகு மீனவா்களை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.