பயிா்க் காப்பீடு பதிவு குறித்து பயிற்சி
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மிளகாய், கோதுமை, உளுந்து, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, நிகழாண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களுக்கு நவம்பா் 15-ஆம் தேதி வரை பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் பொது சேவை மையங்களில் பயிா்க் காப்பீடு செய்ய வசதியாக பொது சேவை மையப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி வேளாண்மைத் துறை, பயிா்க் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்றது.
இதில் பொது சேவை மைய மாவட்ட மேலாளா் ஜெயபிரகாஷ், வேளாண்மை உதவி இயக்குநா் (பயிா்க் காப்பீடு) கீதாஞ்சலி, ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரியா, திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் வட்டார பொது சேவை மையப் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.