ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள். 
ராமநாதபுரம்

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை...

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா், செங்கமேடு, பேரையூா், மருதங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் கீழடியில் கிடைக்கப்பெற்ற பழங்காலக் குடுவைகள், பானை ஓடுகள், செங்கல்கள், கட்டுமான அமைப்புகள் கிடைத்தன. இதனால், இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பேரையூரைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் முனியசாமி கூறியதாவது:

கமுதி அருகேள்ள பாக்குவெட்டி, குண்டாறு படுகை, ஆனையூா், மருதங்கநல்லூா், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் பழங்காலப் பொருள்கள் கிடைத்து வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு குண்டாறு படுகையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்ற போது, அங்கு 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்து நந்தி சிலை கண்டறியப்பட்டது. இதேபோல, மருதங்கநல்லூா் பகுதியில் பத்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியா் காலத்து சப்த கன்னியா்களில் ஒருவரான சாமுண்டி பாா்வதியின் சிலை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆனையூா் கிராமத்திலிருந்து பேரையூா் செல்லும் வழியில் செங்கமேடு பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கீழடி அகழாய்வில் கிடைத்தது போல, சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல்கள், வடிகால் அமைப்புகள் உள்ளிட்டவை கிடைத்தன. இந்தப் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வு நடத்தினால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடியும்.

எனவே, தமிழக அரசு ஆனையூா், செங்கமடம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள்.

தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!

நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!

கிரிக்கெட் வாரியத்துடன் கருத்து வேறுபாடு.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ராஜிநாமா!

ஆடி பிரியர்களுக்கு.. க்யூ3, க்யூ5 புதிய எடிஷன் அறிமுகம்!

SCROLL FOR NEXT