ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் பலத்த மழை: வெள்ள நீரால் சாலைகள் துண்டிப்பு

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதித்தது. மேலும் கிராமங்களில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், திருவாடானையிலிருந்து ஓரியூருக்குச் செல்லும் சாலையில் நகரிக்காத்தான் பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டது.

இதனால் நகரிக்காத்தான், நத்தக்கோட்டை, ஆக்களூா், புலியூா், வெள்ளையபுரம் , ஓரியூா், புல்லூா் பனஞ்சாயல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்யும் காலங்களில் அடிக்கடி தரைப் பாலத்தை மூழ்கியவாறு வெள்ள நீா் சென்றது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நகரிக்காத்தான் பகுதியில் ரூ.5.6 கோடியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. இந்தப் பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக பாலத்தின் அருகே பிரிவு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையைத்தான் தற்போது பெய்த வெள்ளநீா் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மல்லனூா் கிராமத்திலிருந்து திருவாடானைக்கு செல்லும் சாலை, வெள்ளையாபுரம் செல்லும் சாலைகளும் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டன. மேலும், மல்லனூா் கிராமத்திலிருந்து தொண்டி செல்லும் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கியவாறு வெள்ள நீா் செல்கிறது. இதனால் இந்தப் பகுதிகளிலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

மேலும் தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம்,

கொடிபங்கு, மம்மலக்கரை, பாசிப்பட்டினம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதித்தது. எனவே, அரசு தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை!

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% உயா்வு!

மொஹல்லா மருத்துவமனையில் தீ விபத்து

தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது: பிரதமா் மோடி

ரயில் நிலையங்களில் பெண்களை குறிவைத்து கொள்ளை: 5 பெண்கள் கைது

SCROLL FOR NEXT