ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கே. நவாஸ்கனி எம்.பி. சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு, சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீண்ட நாள் கோரிக்கையான சிக்கல் ஊராட்சி ஒன்றியம் இடம் பெறவில்லை. எனவே, கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.