ராமேசுவரம் பகுதியில் புதன்கிழமை பெய்த மிதமான மழையால் சாலைகள், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
தென் தமிழகம், அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், பாண்டிச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
இந்த நிலையில், ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் பகுதி, மாா்க்கெட் தெரு, லட்சுமண தீா்த்தம், பாம்பன் தெற்குவாடி, தோப்புக்காடு, தங்கச்சிமடம் நடுத்தெரு நகா் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 33 மி.மீ., பாம்பன் 29.20 மி.மீ., ராமேசுவரம் 27 மி.மீ, மண்டபம் 23.40 மி.மீ. மழை பதிவானது.