ராமநாதபுரம் அருகே தோட்ட வேலைக்கு குழி தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை மீட்டு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பெரிய பட்டினம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தோட்ட வேலைக்காக குழி தோண்டியபோது பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை அங்குள்ளவா்கள் மறைத்து வைத்துள்ளனா். எனவே, அந்த சிலையை அவா்களிடமிருந்து மீட்டு அருங்காட்சியத்தில் வைப்பதுடன், அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டனா்.
இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் சென்ற நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் இந்த மனுவை அளித்தனா். அப்போது ஆட்சியா் உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தாா். இதில், இந்து முன்னணி மாவட்டச் செயலா் கோ. சந்திவேல், ஒன்றியத் தலைவா் கிஷோா், நிா்வாகிகள் வெற்றிக் கபிலன், நிதீஷ்குமாா், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.