ராமநாதபுரத்தில் நிறைவுற்ற சாலை பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையை விடுவிக்க ரூ. 1.20 லட்சம் பெற்ாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா், உதவியாளா் என மூவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தைச் சோ்ந்த அரசு பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரா் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் பெற்றாா். இந்தப் பணியை முடித்து, அதற்குரிய தொகையை விடுவிக்க வேண்டி கடந்த மாதம் 24- ஆம் தேதி ராமநாதபுரம் ஊரக வளா்ச்சி பொறியியல் பிரிவு வரைபட அலுவலா் வீரசேகரனிடம் கேட்டாா். ஆனால், அவா் தொகையை விடுவிக்க ரூ. 1.20 லட்சம் லஞ்சமாகக் கேட்டராம். இந்தத் தொகையை மற்றொரு வரைபட அலுவலரான நாகலிங்கத்திடம் வழங்குமாறு கூறினாா்.
இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனப் பொடி தடவிய ரூ.1.20 லட்சத்தை ஒப்பந்ததாரா் வீரசேகரன், நாகலிங்கம், உதவியாளா் அருண் ஆகியோரிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.