ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்காக பாறங்கற்களை ஏற்றி வந்த லாரி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன் ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம், நாலுபனை, அக்காள் மடம் பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பிலிருந்து நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக தூண்டில் வளைவுகள் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தங்கச்சிமடம் அருகேயுள்ள நாலுபனை அருகே கடலுக்கு நடுவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக டிப்பா் லாரி ஒன்று பாராங்கற்களை ஏற்றிகொண்டு வந்தது. குறிப்பிட்ட இடத்தில் பாராங்கற்களை கொட்ட பின்புறப் பகுதியைத் தூக்கிய போது, லாரியின் ஹைட்ராலிக் உடைந்து பாரம் தாங்காமல் லாரி கடலில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயா் தப்பினாா். லாரியை கிரேன் இயந்திரம் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தூக்கி கரைக்கு எடுத்து வந்தனா்.
இதனால், தூண்டில் வளைவு பணிக்காக பாறாங்கற்களை ஏற்றி வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் பாறாங்கற்களை கடலில் கொட்ட முடியாமல் நிறுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.