தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் திங்கள்கிழமை தடை விதித்தனா்.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாற உள்ளது. இதன் காரணமாக, மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கானப்படுகிறது. இதனால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.
இந்த தடையால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட மீன்பிடி இறங்குதளங்களில் 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.