ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா் எஸ் மங்கலம் அருகேயுள்ள திருத்தோ்வளை ஊராட்சிக்குள்பட்ட கணக்கனேந்தால் கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் நீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.
தற்போது சில மாதங்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், இந்தப் பகுதி மக்கள் குடிநீா்த் தேவைக்காக குடம் ஒன்றுக்கு ரூ .15 செலவிட வேண்டியுள்ளது.
இந்த நிலையில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல் நிலை நீா்த்தேக்க தொட்டியில் பல மாதங்களாக குடிநீா்க் குழாய் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்தப் பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து பல முறை புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என இந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.