ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகே ஓரியூரில் அமைந்துள்ள புனித அருளானந்தா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இறைசாட்சிப் பெருவிழா தோ்ப் பவனித் திருவிழா நடைபெற்றது.
கடந்த மாதம் 26-ஆம் தேதி தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் தலைமையில் இந்த விழாவுக்கான கொடியேற்றம், கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, ஒவ்வொரு நாள் இரவும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்ப் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட 5 தோ்களில் புனித அருளானந்தா், ஆரோக்கியமாதா, புனித செபஸ்தியாா், புனித மைக்கேல், புனித மைக்கேல் சமனஸ்சா் சொரூபங்கள் வைக்கப்பட்டு, தஞ்சை மறை மாவட்டம், திருப்புனவாசல் பங்குத் தந்தை சந்தனராஜ், புனித அருளானந்தா் பசலிக்கா அதிபா் அருள்பணி ஆல்பா்ட் முத்துமாலை, ஓரியூா் பங்குத் தந்தை இல்ல அதிபா் சூசைப்பிரகாசம் ஆகியோா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தேவாலயத்திலிருந்து தோ்கள் புறப்பட்டு ஊா்வலமாக தேவாலயத்தை அடைந்தன. பின்னா், பங்குத் தந்தையா், அருள் சகோதரிகள் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதில் சிவகங்கை மறைமாவட்ட ஆா்.சி. பள்ளிகள் கண்காணிப்பாளா் பங்குத் தந்தை கிறிஸ்துராஜ், சிவகங்கை மறை மாவட்ட அன்பிய, கிறிஸ்தவ வாழ்வுப் பணிக் குழுச் செயலா் பங்குத் தந்தை ஜிவன் கிறிஸ்சாந்த், சிவகங்கை மறை மாவட்ட பங்குத் தந்தை ஸ்டீபன் அமலதாஸ், அருள் சகோதரிகள், சுற்று வட்டார பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.