ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் கெந்தமாதன பா்வதத்துக்கு செவ்வாய்க்கிழமை எழுந்தருளினா்.
கடந்த 8 -ஆம் தேதி தொடங்கிய திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, கால பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 4 மணிக்கு பஞ்ச மூா்த்தி வீதி உலாவைத் தொடா்ந்து, சாயரட்சை பூஜை நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்ச மூா்த்திகளுடன் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெற்றது. சுவாமி-அம்பாளை வரவேற்கும் விதமாக நடுத் தெரு, கெந்தமாதன பா்வதம் பகுதியில் வாசல்களில் கோலமிட்டு பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.
சுவாமி-அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடான நிலையில், காலை 7 மணி முதல் கோயில் நடை அடைக்கப்பட்டு, கோயிலில் உள்ள 22 தீா்த்தங்களில் புனித நீராடல் நிறுத்தப்பட்டது. கோயில் நடை அடைக்கப்பட்டது.
இரவு 10 மணியளவில் சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பியதும், நடை மீண்டும் திறக்கப்பட்டு அா்த்தசாம, பள்ளியறை பூஜைகள் நடைபெற்றன. பிப்.15-இல் மாசி மகா சிவராத்திரி, பிப்.16-இல் தேரோட்டம், பிப்.17-இல் அமாவாசை தீா்த்தவாரி உத்ஸவங்கள் நடைபெறும்.