ஆப்பனூா் கிராமத்துக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், ஆப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள்,
இளைஞா்கள் கடலாடி வட்டார வளரச்சி அலுவலா் ஜெயஆனந்தனிடம் (கிராம ஊராட்சிகள்) காவிரி கூட்டுக் குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யக் கோரி மனு அளித்தனா்.
இது குறித்து ஆப்பனூா் கிராமத்தினா் கூறியதாவது: கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஆப்பனூா் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம், கூலி தொழில் செய்து வருகிறோம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன.
இந்த நிலையில், கிராமத்துக்கு கடந்த சில வாரங்களாக காவிரி கூட்டுக் குடிநீா் முறையாக வருவதில்லை. இதனால் லாரியில் விற்கப்படும் குடிநீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
மழைக் காலத்தில் கிராமத்தில் உள்ள ஊருணியில் கிடந்த தண்ணீரை இதர பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வந்தோம். தற்போது தண்ணீா் வற்றி வருவதால் இதர பயன்பாட்டிற்கும் தண்ணீா் தட்டுபாடு உள்ளது.
இதனால் காவிரி கூட்டு குடிநீா் முறையாக வழங்க வேண்டும். மேலும் தேவா் சிலை அருகே உள்ள ஆள்துளைக் கிணறு பயன்பாடின்றி தூா்ந்து போய் உள்ளது. இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கிராமத்தில் கழிவு நீா் கால்வாய் வசதியின்றி மழைநீருடன் கழிவுநீா் கலந்து தெருக்களில் பாய்கிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவுவதால் கழிவு
நீா் கால்வாய் அமைத்துத் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.